court

img

கீழடி அகழாய்வு பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் ஆணை!

கீழடியில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2013 முதல் 2016-ம் ஆண்டு வரை ஒன்றிய அரசு சார்பில் கீழடியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.

அப்போது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு ஸ்ரீராமன் என்ற அய்ய்வாளர் 3-ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் இல்லை எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து கீழடி பணிகளைக் கண்காணிக்க அமர்நாத் ராமகிருஷ்ணா மீண்டும் நியமனம் செய்யக்கோரி 2016 ஆம் ஆண்டு வழக்கறிஞர் கனிமொழி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  

அதில், அகழாய்வின் போது கிடைத்த 5,765 பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க மனுதாரர் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த வாரம் அகழாய்வு குறித்து அறிக்கையை 9 மாதங்களுக்குள் சமிர்பிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற விசாரணையில் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வு குறித்து அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.

அறிக்கை வெளியிட்ட பின்பு 5, 765 அகழாய்வு பொருட்களை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒன்றிய அரசு ஒப்படைக்கும் அகழாய்வு பொருட்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

;